வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரம்மாண்ட போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் மூன்று மாதங்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு பிரமாண்டமான போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் வடக்கு பஞ்சாப் பகுதியே குலுங்கியது.
டெல்லிக்கு வெளியே நடத்தப்படும் போராட்டத்தில், வரும் சனிக்கிழமை பஞ்சாப் மாநில விவசாயிகளையும் இணைத்துக்கொள்ள விவசாய சங்கத் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே பல சுற்றுகளாகச் சமரசப் பேச்சு நடைபெற்றுள்ளது. ஆனால், விவசாயிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அதனால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தால் பஞ்சாப் மட்டுமின்றி டெல்லியே ஆடிப்போயுள்ளது.