சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் 45 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது 1 வயது பெண் குழந்தையை தம்பியான தேசப்பன் என்பவரிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு தாய்மாமனான தேசப்பன் 9 வயதுடைய அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறிய பிராட்வேயில் இருக்கும் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு 13 வயதான நிலையில் அவர் காப்பகத்தில் இருப்பதை அறிந்த தேசப்பனும், அவரது மனைவி ரேவதியும் நேரில் சென்று காப்பகத்தில் இருப்பவர்களிடம் பேசி சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை தேசப்பன் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி கர்ப்பம் ஆனார். இதில் சிறுமியின் கருவை கலைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தேசப்பனின் நண்பர்களான சீனிவாசன், ரமேஷ், சிவா ஆகியோரும் இணைந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தாங்க முடியாமல் சிறுமி கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் சிறுமியின் தாய் மற்றும் தாய்மாமன் மனைவி ரேவதி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தேசப்பன், சீனிவாசன், சிவா, ரமேஷ் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.