கலெக்டர் அலுவலகம் முன்பு பொது வழித்தட பிரச்சினையால் 5 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது மேச்சேரி அருகே உள்ள குக்கல்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இவர்களில் மோகலட்சுமி, சத்யா, பரமேஸ்வரி , அலமேலு , மணிமேகலை ஆகிய 5 பெண்கள் தங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது , அவர்கள் கூறியது “கடந்த ஒரு வருடமாக பொது வழித்தட பிரச்சினையால் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொது வழித்தட பிரச்சினையை தீர்க்க வேண்டி தீக்குளிக்க முயன்றோம் என்று அவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.