நீலகிரியில் பழுதான அனைத்து குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் ஏ.டி.எம் இயந்திரங்களை உடனடியாக செயல்முறைக்கு கொண்டு வருவது குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுக்கிடையே ஆலோசனைக்கூட்டம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் எஸ்.பி அம்ரித் தலைமை தாங்க, மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி நகராட்சி ஆணையாளர், காந்திராஜ், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கலெக்டர் பேசியதாவது, நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த கூடாது என்பதற்கு மாற்று ஏற்பாடாக சுற்றுலாத்தலங்கள், நெடுஞ்சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் 70 குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக இயக்கப்படாமல் இருக்கிறது.
சுற்றுலா தலங்களில் ஒன்றான நீலகிரியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாவதால் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும் பழுதடைந்துள்ள குடிநீர் ஏடிஎம் இயந்திரங்களை ஒரு வாரத்திற்குள் சரி செய்ய வேண்டும்.ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு பொறுப்பாளர்களை நியமித்து அந்த எந்திரத்தின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் .அதில் குடிநீர் சரியாக கிடைக்கிறதா என்றும், இயந்திரத்திற்கு மின்சாரம் கிடைப்பதை நேரில் சென்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் பார்வையிட வேண்டும்.
சுற்றுலா பயணிகளுக்கு பயன்படும் வகையில் குடிநீர் சரியான முறையில் கிடைக்கிறதா என்று பொறுப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என்று பார்த்து பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்