பழைய தார் சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைத்ததால் வீட்டின் கேட்டுகளை திறக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட மோகனூரில் இருந்து கொங்கு நகருக்கு செல்லும் சாலை பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுமார் 26 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மீது புதிய சாலையை போட்டுள்ளனர். இதனால் சாலையின் உயரம் 1/2 அடி வரை உயர்ந்ததால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கேட்டுகளை திறந்து அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியினர் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளரான இறையன்புக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்துள்ளனர். இதனை விசாரித்த அவர் உடனடியாக சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி, உயரம் குறைக்கப்பட்டு புதிய சாலை அமைக்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.