மும்பையில் வயதான முதியவர் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண் 1.3 கோடி ரூபாயை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் மல்வாணி பகுதியில் வசித்து வரும் ஜெரோம் என்பவர் தனது சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை முதலீடு செய்து தனது இறுதிக் காலத்தை கழித்து வந்தார். வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் அவருக்கு அங்கு பணிபுரிந்த ஒரு பெண் பழக்கமானார். இதை அடுத்து அவருடன் நட்புடன் பழகிய அந்த இளம்பெண் முதியவருக்கு கடைசி காலத்தில் துணையாக இருப்பதாக நம்பிக்கை கொடுத்து ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
இதை நம்பிய ஜெரோம் அந்தப் பெண்ணுடன் சுற்றி திரிந்தார். இதையடுத்து அந்த பெண் தான் ஒரு பிசினஸ் தொடங்கப் போவதாகவும், அதில் தாங்கள் பார்ட்னராக சேர்ந்தால் வரும் முதலீட்டில் பாதிப் பாதி எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி பணத்தை கேட்டுள்ளார். இதையும் நம்பி அவர் தனது வங்கி கணக்கில் உள்ள 1.3 கோடி ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அவருடனான தொடர்பை முழுமையாக கைவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தப் பெண் சொந்த கிராமத்தில் வேறு ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.