புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.
அதில், தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில் 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஜூன் 3 வரை 4,228 சிறப்பு ஷராமிக் ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், அதில் 57 லட்சம் பேர் பயணம் செய்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சென்றதாகவும், இதன் மூலம் 1 கோடி பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பியதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட உச்சநீதிமன்றம், அடுத்த 15 நாட்களுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டடது. ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், இந்த வழக்கில் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் தொடர்பாக பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.