1999ம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான்க்கு இடையே நடந்த கார்கில் போர் குறித்த சர்ச்சைக் கருத்தை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பதிவுசெய்துள்ளார்.
பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்(44). இவர் வீசிய பந்துகளை கண்டு பயந்த காலம் மாறிபோய், தற்போது இவர் என்ன சர்ச்சை கருத்தை பதிவிடப்போகிறார் என்ற பயம் அனைவரின் மனதிலும் இருந்து வருகிறது. இவர் 1999ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போர் பற்றி சர்ச்சைக் கருத்தை பதிவுசெய்துள்ளார்.
அந்த பதிவில், “1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்காக நாட்டிங்காம்ஷயர் அணி ரூ. 1.71 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்தது. அப்போது கார்கில் போர் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக வாய்ப்பை நான் மறுத்துவிட்டேன். அதன்பின், 2002ம் ஆண்டு மற்றொரு ‘கவுன்டி’ அணிக்காக விளையாட கிடைத்த வாய்ப்பையும் நான் நிராகரித்துவிட்டேன். இதனால் அந்த அணி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
போர் நடந்த போது லாகூருக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு ராணுவ ஜெனரல், இங்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டார். ‘போர் தொடங்கப் போகிறது. அனைவரும் சேர்ந்தே மடிவோம், என்றேன். இந்தியாவில் இருந்து வந்த விமானங்கள், எங்களின் சில மரங்களை சாய்த்துவிட்டன. இச்சம்பவம் என்னை வேதனையடையச் செய்தது” என்று சோயப் அக்தர் வேதனையுடன் கூறியுள்ளார்.