திருநெல்வேலி மாவட்டத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படுவதால் பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தொற்று குறைந்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் கல்லூரிகளும் திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 19 மாதங்களாக 1- ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று முதல் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் வகுப்புகளை தயார்படுத்தும் பணி தொடங்கியது. திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதார அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் மாணவ மாணவிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.