உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அசுரத்தனமாக பரவி வருவது உலக மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.
தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் உலகளவில் மக்கள் அச்ச உணர்வுடன் இருந்து வருகின்றார்கள். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 1,092,986 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 58,727 பேர் உயிரிழந்துள்ளனர். 228,038 பேர் குணமடைந்த நிலையில் 806,221 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 39,402 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அதன் பரவல் வேகம் யாருமே எதிர்பார்க்கமுடியாது அளவுக்கு இருந்து வருவது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கின்றது. இதில் நேற்று ஒரே நாளில் 101,578 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய உலக அறிவியலுக்கே சவால் விடுகின்றது.
கடந்த 31ஆம் தேதி 73,620 பேருக்கும் , 1ஆம் தேதி 76,871 பேருக்கும், 2ஆம் தேதி 79,864 பேருக்கும் கொரோனா பரவி இருந்த நிலையில் நேற்று மட்டும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது உலகிற்கே சவால்விடும் வகையில் கொரோனா பரவி வருகின்றது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 32,284 பேருக்கும், பிரான்ஸ்ஸில் 23,060 பேருக்கும், ஸ்பெயினில் 7,134 பேருக்கும், ஜெர்மனியில் 6,365 பேருக்கும், இத்தாலியில் 4,585 பேருக்கும், பிரிட்டனில் 4,450 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.