தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஐந்தாவது நாளாக மக்களை பதற வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு கொரோனாவின் தாக்கம் உயர்ந்து வருவதால் அதிகம் பாதித்த மாநிலங்கள் வரிசையில், இந்தியாவிலே தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. கடந்த 4 நாட்களாக ஆயிரத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டது அனைவரையும் கதிகலங்க வைத்த நிலையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டது. அதே போல சென்னையிலும் என்றுமே இல்லாத அளவாக 1012 பேருக்கு பாதிப்பு உறுதியாகியது. தொடர்ச்சியாக நாளாவது நாளாக நேற்று உயிரிழப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகி தமிழக மக்களுக்கு கொரோனாவின் கோர முகம் அனைவருக்கு நடுக்கத்தை கொடுத்தது.
நேற்றைய நிலவரம் படி தமிழகத்தில் 25, 872 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் 208பேர் உயிரிழந்துள்ள நிலையில் 11,348 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான தகவலில் தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் பதிவாகி 1384பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த பாதிப்பு 27,256ஆக எகிறியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1072 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 18,693ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இரண்டாவது நாளாக தொற்று 1000த்தை கடந்ததோடு 167 பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 5ஆவது நாளாக இரட்டை இலக்கமாக பதிவாகி இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளந்துள்ளனர். மொத்தமாக 220 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். இன்று ஒரே நாளில் 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்தமாக 14,901 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தொற்று அதிகமாக இருந்தாலும் இன்று ஒரே நாளில் 15,991 பரிசோதனையை தமிழக அரசு மேற்கொண்டது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.