ஈரோடு மாவட்டம் கல்ராமொக்கை என்னும் கிராமத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கிராமமக்கள் தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 104.26 அடியாக உள்ளது. ஆகையால் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் நீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகிறது. அதேபோல் சித்தனக்குட்டை பகுதியை அடுத்த கல்ரா மொக்கை என்னும் கிராமத்தில் தார் சாலைகளில் முழங்கால் பகுதியைத் தாண்டி நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரக்கூடிய அரசு பேருந்தும் கடந்த 3 நாட்களாக வராமல் இருக்க அங்கிருந்து நகரத்திற்குச் செல்லும் பள்ளி குழந்தைகள்,
கூலி வேலைக்குச் செல்லும் வேலை ஆட்கள் ஆகியோர் தண்ணீரில் தத்தளித்து சென்று பின் சித்தன்ன பட்டியில் இருந்து பேருந்து ஏறி நகரத்திற்கு செல்கின்றனர். சித்தனப்பட்டிக்கும் கல்ரா மொக்கை கிராமத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். அவ்வளவு தூரம் கிராம மக்கள் தத்தளித்து நடந்து செல்கின்றனர். இவ்வாறான அவலநிலை வருடந்தோறும் மழைக்காலங்களில் நீடித்து வருவதால் அப்பகுதியில் பாலம் ஒன்றை அமைத்து பேருந்து வசதி ஏற்படுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.