உக்ரைன் போரால், 1 லட்சம் ஐ.டி பணிகள் இந்தியாவிற்கு வருவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து கடுமையாக போர் தொடுத்து வருவதால், உக்ரைனும், மற்ற நாடுகளும் பல பின்விளைவுகளை எதிர்கொள்ளவுள்ளன. அந்த வகையில், உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் பக்கத்து நாடுகளின் ஐ.டி பணியிடங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா உட்பட சில நாடுகள் பொருளாதார தடை விதித்திருப்பதால், ஐ.டி துறை கடும் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டில் டிஜிட்டல் துறையில் 30,000 ஐடி பணியாளர்களும், பன்னாட்டு வர்த்தக சேவைத்துறையில் 20,000 ஐ.டி பணியாளர்களும் பணிபுரிகிறார்கள்.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளில், டிஜிட்டல் மற்றும் வர்த்தக துறைகளில் 40,000 பணியாளர்கள் உள்ளனர். இந்த பணியிடங்களில் 70% இந்தியாவிற்கு மாற்ற வாய்ப்புள்ளது என்று எவரஸ்ட் குழுமம் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. போர் மேலும் தீவிரமடைந்தால், விலையேற்றத்தால், ஐ.டி. சேவைகளின் கட்டணங்கள் உயரும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.