அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 18_ஆவது நாளான கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திரண்டனர். லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டனர்.
அதிகரித்த பக்தர்களின் கூட்ட நெரிசலால் 3 பக்தர்களுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் நடராஜன், கங்காலட்சுமி, நாராயணி என்ற பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல மேலும் இதனிடையே மற்றொருவரும் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது.
இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அங்கே 10 சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 200 மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்த பக்தர்கள் 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.