துருக்கி அரசு சுமார் 10 லட்சம் சிரிய அகதிகளை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரிய நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்திலிருந்து, ஐஎஸ் தீவிரவாத எழுச்சி, அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சிபடைகள் ஆதிக்கம் செலுத்தியது அதிகரித்ததால், உள்நாட்டு போர் உண்டானது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். எனவே, அந்நாட்டை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
அதன்படி துருக்கி நாட்டில் சுமார் 37 லட்சத்திற்கும் அதிகமான சிரிய நாட்டைச் சேர்ந்த அகதிகள் இருக்கிறார்கள். இந்நிலையில் துருக்கி நாட்டின் எதிர்க்கட்சியினர், தங்கள் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்கள், பொருளாதாரம் போன்றவற்றை சிரிய நாட்டைச் சேர்ந்த அகதிகள் அழிப்பதாக குற்றம்சாட்டி கொண்டிருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் துருக்கி நாட்டை சேர்ந்த மக்களிடையே, சிரிய அகதிகள் மீது வெறுப்புணர்வு மேலோங்கி வருகிறது. அவர்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, தங்கள் நாட்டில் வசிக்கும் சிரிய அகதிகளை, அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை அதிபர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை 5 லட்சம் மக்கள் சிரிய நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், மேலும் 10 லட்சம் அகதிகளை விரைவாக சிரியாவிற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகன் அறிவித்திருக்கிறார்.