முதல்வர் வெளியிட்ட அறிக்கை பொய்களின் கூடாரம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த காணொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார். அதோடு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை குறித்தும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்தும் முக.ஸ்டாலின் புள்ளி விவரமாக பேசினார்.
அவர் பேசும் போது, முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அத்தனையும் பொய்கள் தான். பொய்களுக்கு கூடாரமாக பழனிசாமி மாறியிருக்கிறார் அந்த அறிக்கைதான் அதற்கு உதாரணம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்ததாக பழனிச்சாமி சொல்றாரு. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அங்க போய் பார்த்தீங்கன்னா தான் தெரியும் ? வெறும் பெயர் பலகை மட்டும்தான் வச்சிருக்காங்க, எந்த பணமும் ஒதுக்கவில்லை.
எய்ம்ஸ் மருத்துவமனை:
மோடி ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இதுவரை தெரியல. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் மோடி, அவர் சொல்லிட்டு போய்ட்டார். கண்துடைப்புக்காக ஒரு கல்வெட்டை திறந்து விட்டு போயிட்டாரு. அதன் பிறகு ஏதாவது நடந்து இருக்கா.? செங்கல் ஆவது எடுத்து அடுக்கி வைக்கப்பட்டு இருக்கா?
2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்ததில் இருந்து கடந்த 5 ஆண்டுகாலமாக எய்ம்ஸ் நாடகங்கள்தான் நடந்துகிட்டு இருக்கே தவிர, எய்ம்ஸ் மருத்துவமனை வந்தபாடில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்ததா சொல்றது முதல்வரின் முதல் பொய்.
தொழில் முதலீட்டாளர் மாநாடு:
தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழ் மண்ணுக்கு கொண்டு வந்து சேர்ந்துட்டேன் அப்படின்னு பழனிச்சாமி அறிக்கையில் சொல்றாரு. அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தினாங்க அதுல இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டு இருந்ததா சொன்னாங்க அதுவே வரல. பழனிச்சாமி ஒரு உலக முதலீட்டு மாநாடு நடத்தினார்.
அதுல மூன்று லட்சம் கோடிக்கான முதலீடு இருந்ததாக சொல்றாரு அதுவும் வரல. இந்த மாநாடு நடந்ததில் இருந்து இதன் மூலம் வந்த முதலீடு எவ்வளவு. இதனால் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேரு என்கிற புள்ளி விவரத்தை எல்லாம் நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அதை தருவதற்கு பழனிச்சாமி தயாரா?
அண்மையில் கூட இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன். இதுவரை முதலமைச்சர் பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வில்லை. 3 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து விட்டதாக சொல்வது முதல்வரின் இரண்டாவது பொய்.
காவேரி உரிமை:
காவேரி உரிமையை மீட்டு விட்டேன் என்று சொல்றாரு. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநிலத்தில் இருந்து பெற்று தரல. அதுக்காக அவர் மத்திய அரசு கிட்டயோ, கர்நாடக அரசு கிட்டயோ போரட வில்லை, வாதாட வில்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீர் முழுமையாக தடுக்கப்படும்.
ஆனால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினதோடு தனது கடமையை முடிஞ்சிருச்சு என்று முதலமைச்சர் பழனிசாமி நினைச்சிட்டு இருக்காங்க. மேகதாது அணை கட்ட உடனடியாக அனுமதி வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்திக்கிறார். அதனை எதிர்த்து பழனிசாமி அவர்களால் குரல் எழுப்ப முடியவில்லை.
அதனால்தான் திமுக எம்பிக்கள், திமுக எம்.எல்.ஏக்கள் துணிச்சலோடு டெல்லியில் பிரதமரை சந்தித்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனால் காவேரி உரிமை மீட்பு விட்டதாக சொல்றது முதல்வரின் மூன்றாவது பொய்.
டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்:
டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விட்டேன் அப்படின்னு பெருமையா சொல்லுகிறாரே பழனிச்சாமி., போராடக்கூடிய மக்கள் திசையை திருப்புவதற்காக இப்படி ஒரு அறிவிப்பை பழனிச்சாமி வெளியிட்டாரே, தவிர டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அவர் இதுவரை ஆக்கவில்லை. அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை சும்மா வெத்து அறிவிப்பு.
இதுவரை செயல்பாட்டிற்கு வந்த ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டங்களுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அறிவிப்பை வெளியிட்டார். இது மக்களை ஏமாற்றக் கூடிய தந்திரங்களில் ஒன்று. இப்ப இருக்கக்கூடிய திட்டங்களுக்கு எதிராக தான் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படியே இருக்கும் என்றால் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆகும்.
அதைவிட இன்னொரு முக்கியமான துரோகத்தை எடப்பாடிபழனிசாமி பண்ணியிருக்காரு. இது சம்பந்தமா வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இருக்கு. ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு வந்தப்போ வேளாண் மண்டலம் சம்பந்தமாக நாங்கள் இதுவரை எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை, அப்படின்னு நீதிமன்றத்திலே தமிழக அரசு சொல்லி இருக்கு. அதுல இருந்தே வேளாண் மண்டலம் என்பதெல்லாம் வெற்று அறிவிப்பு என்று தெளிவாக தெரிகிறது. அதனால வேளாண் மண்டலம் என்பது முதல்வரின் நான்காவது பொய்.
அத்திக்கடவு அவினாசி திட்டம்:
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தொடங்கி நூற்றாண்டு கனவுக்கு உயிர் கொடுத்ததாக பழனிச்சாமி சொல்றாரு. 1972 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களால் கொள்கை ரீதியாக ஏத்துக்கப்பட்ட திட்டம் இந்தத் திட்டம். அதிமுக கட்சி அதுக்காக எதுவும் செய்யலை. 1990ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதை செயல்படுத்த முயற்சி எடுத்தபோது ஆட்சி கலைஞசு போச்சு. அடுத்து வந்த அதிமுக கட்சியும் அவிநாசி திட்டத்துக்காக எதுவுமே செய்யல.
1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் இந்தத் திட்டத்துக்கு முதல் கட்டமா கோவைக்கு குடிநீர் வழங்கக்கூடிய திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அடுத்த கட்ட பணியில் எதுவுமே செய்யலை. மீண்டும் 2006 ஆம் ஆண்டு நம்முடைய கழக ஆட்சியின்போது அத்திக்கடவு பேஸ் 2 திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார்கள்.
சரவணம்பட்டி அருகில் பிரதான சென்ட்ரல் வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. கோவை முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டது. மத்திய அரசு உடைய ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பப்பட்டு உலக வங்கி, நபார்டு வங்கி, ஜப்பான் வங்கி ஆகியவை கடன் தர முன்வந்தது. ஆட்சி மாறிச்சு அடுத்து வந்த அதிமுக ஆட்சி எதுவும் செய்யல. அத்திக்கடவு குடிநீர் விநியோகத்தை முடக்கிட்டாங்க.
2012-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்திச்சு ஆனாலும் அதிமுக அரசு எந்த முயற்சியும் செய்யல. திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்த எந்த முயற்சி செய்யல. 2015 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. நீதிபதிகள் அதிமுக ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பு போராட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடந்துச்சு.
ஏன் சட்டமன்றத்திலும் நான் தீர்மானம் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் நான் சொன்னேன். இவ்வளவும் நடந்த பிறகு வேறு வழியில்லாமல் இந்த ஆட்சி அறிவித்தது. எனவே அத்திக்கடவு கனவை தான் நிறைவேற்றியதாக எடப்பாடி முதல்வரின் அவர்கள் சொல்வது அஞ்சாவது பொய்.
காவேரி வைகை குண்டாறு இணைப்பு:
காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக எடப்பாடி சொல்லியிருக்கிறார். இந்தத் திட்டத்தை ஜனவரி மாதம் தொடங்கி வைக்க போவதாக அறிவித்து இருக்கிறாரே தவிர நிறைவேற்றவில்லை. கல்யாணம் ஆவதற்கு முன்னாலே குழந்தைக்கு பெயர் வைப்பது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதேமாதிரிதான் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
ஜூன் மாசம் அடிக்கல் நாட்டப் போகிறேன் என்று சொன்னாரு பழனிச்சாமி. ஜூன் மாசம் போயிடுச்சு, அக்டோபர் மாசம் அடிக்கல் நாட்ட போறேன்னு சொன்னாரு, அக்டோபர் மாதமும் போகப்போகிறது. இப்ப என்ன சொல்றாரு, ஜனவரின்னு சொல்றாங்க.
இது 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டம். அதற்கான எந்த முழுமையாக திட்டமிடுதலும் காலக்கெடுவும் இல்லை. சும்மா வெறும் அறிவிப்பு மட்டுமே பழனிச்சாமி வெளியிட்டு இருக்கிறார். எனவே காவிரி, வைகை, குண்டாறு வகையில் இத்திட்டத்தை நிறைவேற்றி விடாத, நிறைவேற்றி விட்டேன் என்று சொல்றது முதல்வரின் ஆறாவது பொய்.
குடிமராமத்து திட்டம்:
நீர் நிலைகளை மீட்டெடுத்து குடிமராமத்து திட்டங்களை செயல்படுகிறதா பழனிச்சாமி சொல்றாரு. ஆளும் கட்சிக்காரர்கள் கொள்ளையடிப்பதற்காக உருவாக்கிய திட்டம் தான் இந்த குடிமராமத்து திட்டம். ஏரிகள், கண்மாய்கள், குளம், குட்டை தூர்வாருதல் – ஆழப்படுத்துதல் -அகலப்படுத்துதல் – கரையை பலப்படுத்துதல் இந்த பணிகளை எல்லாம் விவசாய சங்கங்கள், பயன்பாட்டாளர்கள் சங்கங்கள் மூலமாக தான் செய்யணும். ஆனால் ஆளுங்கட்சி காரங்க அதிகாரிககளை கையில் போட்டுக்கிட்டு பணிகளை நடந்திருப்பதாக காட்டி பணத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்கங்களின் போராட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சி அலுவலகத்திற்கு முன்னால் நடத்திட்டு இருக்கு. குடிமராமத்து திட்டம் என்பது அதிமுக காரர்களுக்கு பணத்தை பிரித்து கொடுக்கக்கூடிய திட்டமாக தான் நடந்து கொண்டிருக்கிறது. பகல் கொள்ளைக்கு வழி வகுக்கக் கூடிய திட்டத்தை நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு திட்டம் என சொல்றது முதல்வரின் ஏழாவது பொய்.
மின்மிகை மாநிலம்:
மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி விட்டேன் என்று சொல்றாரு பழனிச்சாமி. மின்மிகை மாநிலம் என்றால் என்னவென்று பழனிசாமிக்கு தெரியல. சரி மின்சாரத்துறை அமைச்சருக்காவது அது புரியுமா என்று பார்த்தால் அவருக்கும் புரியல. தமிழ்நாடு அரசு தனது தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி பண்ணிக்கிறதோடு தனியாருக்கோ அல்லது வேறு மாநிலத்திற்கு விற்பனை செய்தால்தான் மின்மிகை மாநிலம் என்று அர்த்தம். அப்போதுதான் அது மின் மிகை மாநிலம் என்று சொல்ல முடியும்.
ஆனால் 19 /07 /2020 அன்றைய கணக்குப்படி தனியார் கிட்ட இருந்து 3,580 மெகாவாட் மின்சாரத்தை கடனாக வாங்கி இருக்கு தமிழக அரசு. அதுல நடக்கிற ஊழல் முறைகேடு எல்லாம் தனியா பேச வேண்டிய பிரச்சனை அது வேற. இப்படி மின்சாரத்தை கடன் வாங்கக்கூடிய அரசு அது எப்படி மின்மிகை மாநிலம் என்று அறிவிக்கும், சொல்ல முடியும். இதுதான் முதல்வரின் எட்டாவது பொய்.
நான் ஒரு விவசாயி:
உழவன் வீட்டில் உதித்த ஒருவன் அப்படின்னு தன்னைப் பத்தி அறிக்கையில் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. இந்த உழவன் வீட்டில் உதிர்த்த ஒருவர் ஆட்சிக்கு வந்த பிறகு செஞ்சது எல்லாமே உழவர்களுக்கு துரோகம் தான். மத்திய அரசாங்கம் கொண்டுவரும் மூன்று வேளாண் சட்டங்கள் ஆதரித்ததைவிட விவசாயிகளுக்கு வேறு எந்த துரோகமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த சட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பது, எதிர்ப்பது மட்டுமில்லை எதிர்பார்ப்பது என்னன்னு பாத்தீங்கன்னா குறைந்தபட்ச ஆதார விலை. அதைப்பற்றி இந்த மூன்று சட்டங்கல ஒரு இடத்திலேயும் குறிப்பிடபடல. பிறகு எதற்காக இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும். பச்சைத் துண்டை போட்டுக்கொண்டு எடப்பாடி செய்யும் பச்சை துரோகம் இது. எனவே அவர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்லுகிறது அவருடைய ஒன்பதாவது பொய்.
நீட் தேர்வு:
நான் பழி பாவங்களுக்கு அஞ்சுபவன் அல்ல என்று அறிக்கையில் தன்னைப்பற்றி சொல்லி இருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. இன்றைக்கு அதை புரிஞ்சு பார்க்கணும். அவரின் அரசியலே பழி பாவங்களுக்கு நிறைந்ததுதான். சசிகலாவின் காலுக்கடியில் ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆனவர் பழனிச்சாமி. 3,500 கோடி ரூபாய் ஒப்பந்தங்களை தன்னுடைய பினாமி சொந்தங்களுக்கு கொடுத்ததாக ஒரு வழக்கு பதிவாகி இருப்பது உங்களுக்கு தெரியும்.
அந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தணும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு போட்டது. அதுக்கு உச்சநீதிமன்றம் வரை போயி தடை வாங்கியதால் மட்டுமே பழனிச்சாமி இதுவரை பதவியில் நீடித்து விட்டு இருக்கிறார். அப்படி இல்லன்னா எப்போதோ அவர் பதவி பறிக்க பட்டு இருக்கும். அதே மாதிரிதான் ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை அந்த சம்பவங்களில் பழனிசாமி மீது நேரடியாகவே குற்றம் சாட்டப்பட்டது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டரும் முதல்வர் தான். தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் போனவர்கள் மேல் ஈவு இரக்கமில்லாமல் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் இந்த ஆட்சி. நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகும் மத்திய அரசிடம் இருந்து விலக்கு பெற முடியாத காரணத்தினால் 13 க்கும் மேற்பட்ட அப்பாவி மாணவ மாணவிகள் தற்கொலை பண்ண கொடூரத்துக்கு இந்த ஆட்சி தான் காரணம். இப்படிப்பட்ட பழனிச்சாமி… நான் பழி பாவங்களுக்கு அஞ்சுபவன் என்று சொல்றது பத்தாவது பொய்.