10 பேரில் ஒருவருக்கு கொரோனா இருக்கின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் முதல் முதலாக கொரோனா நோய் மார்ச் 7ம்தேதி கண்டறியப்பட்டது. மார்ச் 21ம் தேதி மத்திய அரசு ஊரடங்கு அறிவிக்கும் வரை இரண்டு வாரங்களாக தமிழக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.முதல்கட்ட ஊரடங்கின் போது தினமும் சராசரியாக 40 பேர் என்ற அளவில் 1204 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இரண்டாம் கட்ட ஊரடங்கின் போது தினமும் சராசரியாக 101 பேர் என்ற கணக்கில் 2757 பேர் பாதிக்கப்பட்டனர். 3ம் கட்ட ஊரடங்கின் போது மே 3 முதல் 17 வரை தினமும் 586 பேர் என்ற சராசரியில் 8,601 பேர் பாதிக்கப்பட்டனர்.
10 பேரில் ஒருவருக்கு கொரோனா:
4ஆம் கட்ட ஊரடங்கின் போது மே 31 வரை சராசரியாக தினமும் 904 பேர் என்ற அளவில் 22,333 என எண்ணிக்கை அதிகரித்தது. இன்றைக்கு நோய்த் தொற்றானவர்கள் எண்ணிக்கை 44 ஆயிரத்தை தாண்டி விட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி 1 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த நோய்தொற்று இன்று 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 10 பேரை பரிசோதித்தால் அதில் 1வருக்கு கொரோனா என்ற நிலை உருவாகிவிட்டது. நோய் தொற்றின் எண்ணிக்கை 11 நாட்களில் இரண்டு மடங்காகி வருகிறது. நாட்டிலேயே இந்த வேகத்தில் அதிகரிக்கும் இரண்டாவது மாநிலம் தமிழகம் என்பதை தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.
டெல்லியை விட சென்னை அதிகம்:
மே 12 ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,718 பேர். தற்போது ஜூன் 14-ஆம் தேதி இந்த எண்ணிக்கை ஐந்து மடங்காக அதிகரித்து 44,661 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையை பற்றி தனியா நான் சொல்லி விடுகின்றேன். இந்தியாவிலுள்ள பிற எந்த நகரத்தை விடவும் சென்னையில்தான் நோய்ப் பரவலின் வீதம் அதிகமாக இருக்கிறது. டெல்லி போன்ற நகரங்களில் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் தலா 990 மற்றும் 967 என்று நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும், சென்னையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1,597 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.
இரக்கமற்ற அரசு:
நாடு முழுவதும் உள்ள மொத்த கொரோனா எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 10 சதவீதம் மட்டுமின்றி தற்போது, நோய் தொற்று 5.2 சதவீதம் என்ற வீதத்தில் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 435 பேர் கொரோனா நோய் தொற்றினால் இறந்து இருப்பதாகவும், அது 0.7 சதவீதம் மரண வீகிதம் என்று அரசு வெளியிட்டுள்ள தகவல் தெரிகின்றது. இந்த அரசாங்கம் எந்தளவுக்கு இரக்கமற்றதாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதி வரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனை பார்த்து மாநில அரசாங்கத்துக்கு பதற்றமோ, படபடப்போ வந்ததாக தெரியவில்லை.
கிடைத்த வாய்ப்பை தவற விட்ட அரசு:
படிப்படியாக ஒவ்வொரு நாளும் இந்த அரசாங்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிட்டு வந்துள்ளது என்று நான் பகிரங்கமாக இந்த நேரத்தில் குற்றம்சாட்டுகின்றேன். மார்ச் 7 தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. முதல் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், தொடக்கத்திலிருந்தே வாய்ப்புகள் இருந்தபோதும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.அடுத்தடுத்து நோய் தொற்று பரவுயும் அரசு செயல்படாத அலட்சியத்தால் இன்றைக்கு நம்மை நோய் பேரிடருக்கு அழைத்துச் சென்றிருக்கிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் புட்டுபுட்டுவென புள்ளி விவரங்களோடு அடுக்கினார்.