தாமிரபரணி ஆற்றில் இருந்து 1 டன் எடையுள்ள நந்தி சிலை மற்றும் பெண் கற் சிலையை அதிகாரிகள் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தாலங்குறிச்சி பகுதியில் பூந்தலை உடையார் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் அதே பகுதியில் வசிக்கும் வள்ளிநாதன் என்பவர் மீன்பிடிக்க சென்ற போது, ஆற்றிற்குள் நந்தி சிலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வள்ளிநாதன் உடனடியாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றுக்குள் கிடந்த சிலையை கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து சுமார் 1 டன் எடையுள்ள அந்த நந்தி சிலையின் காது பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் கிடந்த 60 கிலோ எடையுள்ள பெண் வடிவ கற்சிலையையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர். அதன்பிறகு மினி லாரியில் ஏற்றி மீட்கப்பட்ட சிலைகளை தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதுகுறித்து தாசில்தார் கூறும் போது, மீட்கப்பட்ட சிலைகள் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்ற பிறகு நெல்லை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.