தூத்துக்குடி அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் மீனவ தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி பெட்ரா. இவர்கள் இருவருக்கும் ரபீக், எட்வின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ரபீக் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
எட்வின் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களது தாய் மனநலம் பாதிக்கப்பட்டு அவரது உறவினர் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், ராஜாவும் அவ்வப்போது மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதால், இரண்டு மகன்களும் பாட்டியின் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் எட்வின் ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து பள்ளிக்கு செல்கிறாயா அல்லது உன் தந்தை திரும்பி வந்தவுடன் சொல்லி கொடுக்கட்டுமா என்று கேட்டுவிட்டு அவரது பாட்டி அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் திரும்பி வந்து பார்க்கையில் பேரன் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். பின் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.