மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மகன் மற்றும் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து இன்னலை சந்தித்து வருகின்றனர். அப்படி மகாராஷ்டிர மாநிலத்தில் வேலை இன்றி தவித்து வந்த தொழிலாளி ஹனுமந்தை என்பவர் தனது மனைவி பிரக்யா மற்றும் ஒரு வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். வேலை இல்லாத காரணத்தினால் தொடர்ந்து பட்டினியாக இருந்து வந்துள்ளனர்.
இதன் காரணமாக தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு செய்தார். அதற்காக கடந்த 10ஆம் தேதி மனைவி மற்றும் மகனை கூர்மையான கத்தியை கொண்டு குத்தி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.