பத்து வருடங்களுக்கு பிறகு சுயநினைவுக்கு திரும்பிய நபர் தனது குடும்பத்தினரிடம் சேர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றனர். வடமாநிலங்களில் இருந்து வருபவர்கள் பலர் இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துவந்து தனியாக விட்டுச் செல்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு நினைவு திரும்பிய நிலையில், தற்போது அவர் காந்தி மண்டபம் அருகில் கடை வைத்துள்ள ஒருவரின் பொறுப்பில் இருக்கிறார்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டு நினைவு திரும்பிய இளைஞரிடம் விசாரித்தபோது, அவர் அரியலூர் மாவட்டம் சிலம்பூர் பகுதியை சேர்ந்த சிவானந்தம் என்றும் அவரது அப்பா கிருஷ்ணமூர்த்தி, பெரியப்பா நாகமுத்து என்றும் கூறியுள்ளார். மேலும் அவரது உறவினர்கள் பற்றிய விவரத்தையும் தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அவரை வீடியோ எடுத்து, அவர் தெளிவான மனநிலையில் இருப்பதாக காண்பித்து பெற்றோரிடம் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் பலருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர். அந்த இளைஞரின் உறவினர்கள் தகுந்த ஆதாரங்களுடன் அவரை திருப்பி அழைத்துச் செல்லவும் அவர்கள் கூறியுள்ளனர்.