கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்துள்ள இதம்பாடல் பகுதியில் தர்மர் (வயது 40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் (32) என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற தர்மர் திடீரென மாயமானதாக அவரது தங்கை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அந்த விசாரணையில் தர்மரின் மனைவி பாண்டியம்மாள் பனையடியேந்தல் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் முருகேசன் (45) என்பவருடன் கள்ள தொடர்பு இருந்ததும், அதனை தர்மர் கண்டித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த தர்மனை பாண்டியம்மாள் மற்றும் முருகேசன் திட்டமிட்டு கொலை செய்து, அப்பகுதியில் உள்ள கண்மாயில் புதைத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த கண்மாய்க்கு சென்று தோண்டிய பொது தர்மரின் எலும்புக்கூடுகள் மற்றும் நைலான் கயிறு இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி முருகேசன், பாண்டியம்மாள் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மேலமடை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், காளிதாஸ், குமார் ஆகிய 5 பேரை கைது செய்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் தர்மரை கொலை செய்த முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும் பாண்டியம்மாள் மற்றும் காளிதாஸ், ரவிச்சந்திரன், குமார் ஆகிய 4 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.