பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விளையாட்டு மைதானம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி கல்வி, அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2010 -11 கல்வியாண்டில் 1,00,320 மாணவர்கள் படித்த நிலையில், தற்போது நடப்பு கல்வியாண்டில் 1,02,214 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் படிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2021-22ம் கல்வியாண்டில் 27 ஆயிரத்து 311 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்து 38 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து, மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.