தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு தொடர்பான பணிகள் அக்டோபர் 18ஆம் தேதி வரை நடக்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களில் அனைத்து கல்வித் தகுதியையும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. அதன் மூலமாக அரசுத் துறைகளுக்கு தேவையான பணியாளர்களை அரசு நியமிக்கும் போது வயது மூப்பு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் பணி தேர்வு நடை பெறுவது வழக்கம்.
இதற்கு முன்னதாக மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று பெறும் நாள் அன்று பள்ளிக்கு எடுத்துச் சென்று வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்து கொள்ளலாம்.
அக்டோபர் 18ஆம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவு பணிகள் அந்தந்த பள்ளியிலேயே நடைபெறும். மேலும் வேலைவாய்ப்புத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான https:// tnvelaivaaipu.gov.in என்ற இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவு பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.