ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து வள்ளியாற்றை பாதுகாக்க வேண்டிமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளிமலை குரங்கேற்றி பகுதியிலிருந்து வள்ளி ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு கடியபட்டினம், மணவாளக்குறிச்சி, குன்னங்காடு, இரணியல், கொல்லன்விலை, பத்மநாதபுரம், கீழமூலச்சல், சரல்விலை, முட்டைகாடு வழியாக பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆற்றின் மூலமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஆறு தற்போது பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு தென்னை மரம், வாழை மரம், பலா மரம் போன்ற பல மரங்களை நட்டுள்ளனர். இதனையடுத்து மர்ம கும்பல் சிலர் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த ஆறு பாழடைந்து ஓடைபோல் காட்சியளிக்கிறது. எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.