உடல் நலம் சரியில்லாத நபரை பொதுமக்கள் கட்டிலில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் வைலம்பாடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சாலை வசதி, பேருந்து வசதி, மருத்துவம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடை வீதிக்கு செல்வதற்கும், மருத்துவமனைக்கு செல்வதற்கு கூட பொதுமக்கள் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஆண்டி என்பவருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பொதுமக்கள் அவரை கட்டிலில் வைத்து 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளனர். அதன்பிறகு மட்டப்பாறை பகுதியிலிருந்து வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த கிராமத்தில் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லாமல் போனால் கடுமையான வெயிலுக்கிடையில் அவர்களை நடந்தே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியிருக்கிறது.
இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கல்வராயன் மலை பகுதியில் சாலை வசதி அமைப்பதற்காக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் மைலம்பாடி கிராமத்திற்கு எந்த ஒரு சாலை வசதியும், பேருந்து வசதியும் அரசு செய்து தரவில்லை. இந்த பகுதியில் சாலை வசதி அமைப்பதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் மருத்துவ வசதி போன்றவைகள் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.