சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து மின்சாரம் தடைபட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் காலை கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது தெரியவந்தது. இதனால் வீட்டில் இருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் சேதமடைந்தது. பின்னர் அனைத்து வீடுகளுக்கும் ஊழியர்கள் தற்காலிகமாக மின் இணைப்பு கொடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.