நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பி.வி.நாகரத்னா போன்றோரை கொண்ட அமர்வு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணைக்குப் பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை சுலபமாக்குவதற்கு மாநில சட்ட சேவை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளருடன் ஒருங்கிணைந்து செயல்பட, அர்ப் பணிப்புடன் செயல்படக் கூடிய தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.
அதன்பின் இறந்தவர்களின் பெயர், முகவரி, இறப்பு சான்றிதழ் என்று முழு விபரத்தையும் ஒரு வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட சட்டசேவை ஆணையத்துக்கு மாநில அரசுகள் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கத் தவறினால் இந்த விவகாரம் நீதிமன்றத்தால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும். இதனிடையில் இறந்தவர்களின் குடும்பங்களை மாநில சட்ட சேவை ஆணையத்தினர் அணுகி, இழப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்வதை உறுதி செய்வார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாக அவர்கள் செயல்படுவார்கள்.
மேலும் இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்யாதவர்களை சென்றடைவதே சட்ட சேவை ஆணையத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். கொரோனா இழப்பீடு கோரும் விண்ணப்பங்களை குறைபாடுகளை சொல்லி நிராகரிக்கக்கூடாது. அந்த குறைபாடுகளை சரிசெய்வதற்கு அவகாசம் வழங்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பம் வந்த 10 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பீகார் உட்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறைவாகவும், நிவாரண நிதி கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டி தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர். ஆகவே இந்த விஷயத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக அறிந்து தகவல் வழங்கவும் உத்தரவிட்டனர்.