Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“10 நாட்கள் கால அவகாசம்”…. பள்ளி வாகனங்களில் அதிரடி ஆய்வு…. அதிகாரியின் எச்சரிக்கை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பள்ளி வாகனங்கள் கொண்டுவரப்பட்டது. அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள் சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய தாலுகாக்களில் மொத்தம் 345 பள்ளி வாகனங்கள் இருக்கிறது. ஏற்கனவே இந்த வாகனங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது சென்சார் வசதியும் இருப்பதால் 3 அடி உயரத்திற்கு மேல் உள்ளவர்கள் வந்தால் சத்தம் கேட்கும். கேமரா மூலம் ஆட்கள் வருகிறார்களா என்பதை பார்க்க முடியும்.

இதன் செயல்பாடுகளை வாகனத்தில் இருக்கும் சிறிய அளவிலான கணணியை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தற்போது வரை 100 பள்ளி வாகனங்களில் சென்சார் வசதியுடன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களுக்கு 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்துள்ளோம். அதன் பிறகும் சென்சார் வசதியுடன் கேமரா பொருத்தவில்லை என்றால் ஆய்வு செய்து அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |