ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புத்தக பையின் சுமை, மாணவர்களின் உடல் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கிடையாது. மேலும் புத்தகப் பையின் எடையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புத்தகங்களை வைத்து செல்ல லாக்கர்கள், டிஜிட்டல் எடை எந்திரம், தண்ணீர் பாட்டில் சுமையை தவிர்க்க தரமான குடிநீர் வசதியை பள்ளிகள் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.