தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்ததையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த மாதம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 10-ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த பிப்.9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரைநடைபெற்றது. மேலும் இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.4 ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து 12- ஆம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு பிப்.9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28 ஆம் தேதி முதல் ஏப்.5 ஆம் தேதி வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் திருப்புதல் தேர்வின் போது ஒவ்வொரு நாளும் முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மேலும் இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2-ஆம் திருப்புதல் தேர்வின் விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.