சென்னை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒருவர்கூட பலியாக வில்லை என நிம்மதி தரும் செய்தி வெளியாகியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி கொரோனாவுக்கு முதல் பலி பதிவானது. அதன்பிறகு தற்போது வரை 4,085 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் 33 சதவீதம்.
இந்நிலையில் சென்னை மக்களுக்கு ஆறுதலும் நிம்மதியும் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் ஜனவரி 24 அன்று கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாக வில்லை. கடந்த 10 மாதங்களில் சென்னையில் கொரோனாவும் பலி எண்ணிக்கை இல்லாமல் இருந்தது இதுவே முதல் முறை. அதுமட்டுமன்றி சென்னையில் 168 பேருக்கு நேற்று முன்தினம் புதிதாக கொரோனா கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் 2,696 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.