10 ரூபாய் பழைய பாக்கியால் ஏற்பட்ட பிரச்சினையில் சாலையோர கடை உரிமையாளரை வாடிக்கையாளர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள டொரியா கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ் குப்தா. இவர் தனது கிராமத்தில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதேகிராமத்தை சேர்ந்த தினேஷ் 10 ரூபாய்க்கு சாட் மசாலா என்ற உணவை சாப்பிட்டுள்ளார். மேலும், இதற்கான பணம் 10 ரூபாயை தராமல் கடன் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து, சிறிது நேரத்தில் மற்றொரு நண்பருடன் மீண்டும் வந்த தினேஷ், தனது நண்பருக்கு ‘சாட் மசாலா’ வழங்குமாறு கடை உரிமையாளரிடம் தினேஷ் கேட்டுள்ளார். ஆனால், ஏற்கனவே 10 ரூபாய் பழைய பாக்கி இருப்பதால், கடை உரிமையாளர் குடுக்க மறுத்ததுடன், அந்த பணத்தை தரும்படி தினேஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால், கடை உரிமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் கடை உரிமையாளர் அவினாஷை வாடிக்கையாளர் தினேஷ் இரும்பு கம்பியால் தாக்கினார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவினாஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.