கடந்த 5 ஆண்டுகளாக பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கிய வாலிபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள காடையாம்பட்டி பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாயப்பட்டறையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருக்கிறார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பை முடித்துவிட்டு விளையாட்டு இயக்குனருக்கான மேல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் குமாருக்கு தனது உழைப்பினால் சேகரித்த பணத்தில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அப்போது ஈரோடு மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என வதந்தி பரவியதால் கடைகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கும், கொடுப்பதற்கும் மறுப்பு தெரிவித்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பத்து ரூபாய் நாணயங்களை சேகரிக்க வேண்டும் என்று சந்தோஷ் குமாருக்கு ஆசை வந்தது. கடந்த 5 ஆண்டுகளாக சந்தோஷ் குமார் பத்து ரூபாய் நாணயங்களை சேமித்து வைத்தார்.
அதன் மதிப்பு இப்போது 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனை அடுத்து ஈரோடு பெருந்துறை சாலையில் இருக்கும் தனியார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலைய ஷோரூமுக்கு சந்தோஷ் குமார் சென்றுள்ளார். அங்கு அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக 7 கிலோ 750 கிராம் எடையுள்ள நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் காரில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அதனை கொடுத்து சந்தோஷ் குமார் புதிய மோட்டார் சைக்கிளை வாங்கியுள்ளார். இவரது செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.