கேரள மாநிலத்தை சேர்ந்த அனஸ்வரா ஹரி என்ற பெண் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்த சட்டக்கல்லூரி மாணவி தற்போது வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் அனஸ்வரா ஹரி என்பவர் தனது குடும்பத்துடன் சபரி மலைக்குச் செல்லும் வழியில் ஒரு வனப்பகுதியில் ஹோட்டலை நடத்தி வருகிறார். அந்த ஓட்டல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. அவரது தந்தை அனஸ்வரா சிறு வயதாக இருக்கும் பொழுது அவரை விட்டு சென்றுவிட்டார். பின்னர் அவரது தாய் அந்த ஹோட்டலின் பொறுப்பை எடுத்து நடத்தி வருகிறார். இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. முதலில் டீ போட்டும் சில உணவுகளை தயாரித்து வழங்கி வந்தன.
அனஸ்வராவுக்கு பதிமூன்று வயது இருக்கும் பொழுது அந்த ஓட்டலில் தாமும் தாய்க்கு உதவியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்து பரோட்டா போடுவது எப்படி என கற்றுக் கொண்டார். முதலில் அடுப்பில் வரும் போது சிறிய தீ காயங்கள் ஏற்பட்டது. இருப்பினும் குடும்பத்தின் வறுமையைப் போக்க வேண்டும் என்று துணிச்சலுடன் போராடி நாளுக்கு நாள் புரோட்டா மாவு செய்வது எப்படி என தொடங்கியதிலிருந்து புரோட்டாவை சுட்டு அதை தட்டி எடுப்பது வரை வேலை செய்ய ஆரம்பித்தார்.
அதற்காக அவர் படிப்பையும் விட்டு விடவில்லை. பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இவர் பரோட்டா போடும் தொழிலை செய்து வந்தார். ஒருநாளைக்கு 150 பரோட்டா போடுவாராம். தற்போது 23 வயதாகும் அவர் தொடுபுழாவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை பயின்று வந்தார். ஒருபுறம் புரோட்டா போடுவது, மறுபுறம் தனது சட்டப் படிப்பை படிப்பது என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் சட்டம் பயின்று கொண்டே பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவர் தற்போது பட்டம் பெற்ற நிலையில் எர்ணாகுளத்தில் சேர்ந்த மனோஜ் வி. ஜார்ஜ் என்ற பிரபல வழக்கறிஞரிடம் ஜூனியராக சேர்ந்துள்ளார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அனஸ்வரா செய்து காட்டியுள்ளார்.