கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளை பகுதியில் குருநாதன், சுஜா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜேசு அந்தோணி ராஜ் என்பவரை சுஜா திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சுஜா வேலைக்கு சென்று விட்டார். அவர்களின் மகள் மகேஸ்வரி (10) அங்குள்ள ஒரு கடையில் பிஸ்கட் வாங்கி விட்டு, அதற்குரிய பணத்தை கொடுக்காமல் வந்துள்ளார். இதுகுறித்து அந்தோணி ராஜிடம் கடை வியாபாரி புகார் அளித்துள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அவர், வீட்டிற்கு சென்று மூன்று குழந்தைகளிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு ஆத்திரமடைந்த அவர் மூன்று குழந்தைகளின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார். அதில் மகனும் ஒரு மகளும் சத்தமிட்டுக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அவர்களின் மீது லேசாக தீப்பிடித்தது. அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர்.
இதையடுத்து கடையில் இருந்து வீடு திரும்பிய சுஜா மற்றும் பொதுமக்கள் வீட்டில் தீ பிடித்த நிலையில் இருந்த மகேஸ்வரியின் உடலில் இருந்த தீயை அணைத்து, படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தீ காயம் காரணமாக அந்தோணிராஜ் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.