மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மக்களவை உறுப்பினர் சுஜய் விகே பாட்டீல் என்பவரின் மகள் அனிஷா. இவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அனிஷாவின் தந்தையோ, “பிரதமர் மிகவும் பிஸியாக இருப்பவர். அவரை முன் அனுமதி வாங்காமல் சந்திக்க முடியாது” என மறுப்பு தெரித்துள்ளார்.
இதனையடுத்து அனிஷா, தனது தந்தையின் மடிக்கணினியிலிருந்து, “உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளார். இதற்கு, பிரதமர் மோடி “உடனே விரைந்து வாருங்கள்” என பதிலளித்ததை பார்த்து அனிஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது தந்தை அவரை நாடாளுமன்றம் அழைத்துச் சென்றார்.
அங்கே பிரதமரை பார்த்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் அனிஷா, அவரிடம் பல கேள்விகளை கேட்டார். சுமார் 10 நிமிட சந்திப்பில், இறுதியாக, அச்சிறுமி மோடியிடம், நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர், எப்போது இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஆவீர்கள் எனக் கேட்டார். அவ்வளவுதான், பிரதமர் மோடியும், அங்கிருந்தவர்களும் சிரிக்கத் தொடங்கினர். எப்போதும் சீரியசாக இருக்கும் அந்த இடமே சிரிப்பலையால் கலகலவென ஆனது.