பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார்.
தற்போது தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் காலவரையற்ற விடுமுறை எதுவும் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசு தேர்வு இயக்கம் ஒரு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எளிதில் கிழியாத, நீரில் சேதமடையாத வகையில் செயற்கை இழையால் மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 10 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டமானது நடப்பு கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.