தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் படிப்படியாகக் குறையத் தொடங்கிய நிலையில், 2021 – 22 ஆம் கல்வி ஆண்டினை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து தற்போது பொது தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி பிளஸ் 2 பொது தேர்வு மே மாதம் 5ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10-ஆம் தேதியும் பொதுத்தேர்வு நடக்க இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2 வருடம் கொரோனா நோய் பரவலின் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது தேர்வு நடத்துவதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றி நடத்த பள்ளிக் கல்வித்துறை தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அந்த வகையில் தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் மற்றும் பறக்கும் படையினர் செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வரவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி அணிந்து வந்தாலும் கூட, தேர்வு மையத்திற்கு வெளியே களட்டி விட வேண்டும் எனவும் அதிரடியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு 177 மையங்களும், பிளஸ்1 தேர்வுக்கு 177 மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதேப்போன்று 10ம் வகுப்பு தேர்வுக்கு 227 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் கூறியுள்ளதாவது, 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து இதற்காக சென்னை மாவட்டத்தில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, மேலும் இது தவிர 10 அறைக்கு ஒரு நிலை பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்கள் மட்டும் கூடுதலாக 1 மணி நேரம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.