ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்தும் நேற்று சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு மார்ச் மாதத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வு நடத்தப்படும்.
இதையடுத்து ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத்தில் பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில் குழந்தைகளின் உடல் நலன் தான் எங்களுக்கு முக்கியம். வருகிற 3ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்படவுள்ளது. முதல்வரிடத்திலிருந்து ஏதாவது அறிவிப்பு வந்தால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.