வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசு சமீபத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டது.. இதையடுத்து 10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வன்னியருக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி ரத்து செய்து நவம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்தது..
இந்நிலையில்சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.. 100 பக்கங்கள் கொண்ட இந்த புதிய மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் குமணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
அந்தமனுவில், உள்ஒதுக்கீடு என்பது வன்னியர் சமூகத்துக்கானது மட்டுமல்ல, அதிலுள்ள 7 பிரிவினருக்கானது. அரசியலமைப்பு சட்டத்தின் படி உள்ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒட்டு மொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை இந்த தடை உத்தரவின் மூலமாக சந்தித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தவறானது.
மேலும் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு முரணாக இருக்கிறது, தவறானது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முகாந்திரம் உள்ளது, உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில் தான் உள்ஒதுக்கீடு தரப்பட்டது.” என்று பல விஷயங்களை மனுவில் குறிப்பிட்டுள்ளது.