10 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் இருளர் இன மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தளபதி நகரில் இருளர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், ரேஷன் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சாரம், சாலை மற்றும் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து மழை காலங்களில் பாம்பு, தேள் போன்றவை வீடுகளுக்குள் நுழைந்து விடுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இங்கு வசிக்கும் மக்கள் ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரையே பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். மேலும் உடல்நிலை சரியில்லை என்றால் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிங்காரப்பேட்டை மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். அதோடு ரேஷன் கடைகளுக்கும் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.