விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மோகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, விராசாட் திட்டத்தின் கீழ் கைவினை கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்காக விராசாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுவதற்கு தேவையான பொருட்களுக்கான கடன் உதவி குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும்.
அதன்பிறகு தனிநபர் திட்டம் 1-ன் கீழ் கடன் பெற வேண்டும் என்றால் அதற்கு மாத வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 98 ஆயிரம் ரூபாயாகவும், நகர்ப்புறமாக இருப்பின் மாத வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் இருக்க வேண்டும். அதன் பிறகு ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும். இதில் அதிக பட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் நிலையில், தவணைத் தொகையை வட்டியுடன் 5 வருட காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
இதைத்தொடர்ந்து தனிநபர் திட்டம் 2-ன் கீழ் கடன் பெற வேண்டும் என்றால், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வருமானம் 8 லட்சத்திற்கும் மேல் இருப்பதோடு, ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டியலும், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டியலும் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை கடனாக வழங்கப்படும். இந்த கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 5 வருட காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும்.
இந்த கடனை வாங்குவதற்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 3, கூட்டுறவு வங்கி சொல்லும் ஆவணங்கள், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விபரம், குடும்ப அட்டை இருப்பிட சான்றிதழ், வருமானச் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல் போன்றவைகள் இருக்க வேண்டும். மேலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்கள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், விருதுநகரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகம், விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்றவற்றை அணுகலாம்.