10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள வீரப்பெருமாநல்லூர் சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் மற்றும் ஜெயபால் என்பது தெரிய வந்துள்ளது.
அதன்பின் அவர்கள் அளித்த தகவலின்படி காவல்துறையினர் ஜெயபாலின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது 50-க்கும் மேற்பட்ட சாக்கு பைகளில் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சங்கர் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.