10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலாவை மினி லாரியில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் முன்பு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மினி லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அந்த மினி லாரியில் குவித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகளுக்கு கீழே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றை 24 மூட்டைகளில் கட்டி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் மினி லாரியின் ஓட்டுநரை பிடித்து விசாரித்தபோது அவர் குளத்தூர் பகுதியில் வசிக்கும் பழனி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மினி லாரி மற்றும் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள புகையிலை மற்றும் பான்மசாலா போன்றவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.