10 பவுன் நகை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூசனூர் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது குறித்து குருலட்சுமி குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நகையை திருடியது பூசனூர் பகுதியில் வசிக்கும் மாரீஸ்வரனின் மனைவி முருகேஸ்வரி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகேஸ்வரியிடம் நடத்திய விசாரணையில் மாடசாமியும் குருலட்சுமியும் வேலைக்கு செல்லும் போது வீடு பூட்டி சாவியை வைக்கும் இடத்தை அறிந்து கொண்டு, அங்கு சென்று கதவை திறந்து வீட்டிற்குள் சென்று அங்கிருந்த நகையை திருடியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகேஸ்வரியை கைது செய்ததோடு அவரிடமிருந்து 9 1\2 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.