திண்டுக்கல் அருகே பழிக்குப்பழி வாங்க எண்ணி வாலிபரை கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, 3 வது நபர் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொலை செய்த கும்பலை 24 மணி நேரத்திற்குள் கட்டாயம் பிடிக்க வேண்டும் என்பதற்காக தனிப்படை அமைத்து சொன்னபடி, 24 மணி நேரத்தில் நான்கு 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் உட்பட மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரிக்கையில், அவர்கள் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரும் சங்கர் என்ற நபரும், மிக நெருங்கிய நண்பர்கள். நல்ல நண்பர்களாக இருந்த இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பரம எதிரிகளாக மாறி இரண்டு அணிகளாக பிரிந்தனர். இரண்டு பேர் கோஷ்ட்டியிலும் ஆட்கள் பலம் அதிகம் உண்டு. பரம எதிரிகளான பின்பு ஒருவரை ஒருவர் கொலை செய்ய பல முயற்சிகள் மேற்கொண்டனர்.
அதன்படி, கடந்த 2015ஆம் ஆண்டு பாலசமுத்திரம் பகுதியில் இருக்கக்கூடிய மதுபானக் கடை ஒன்றின் அருகே வைத்து மாரிமுத்துவை தலையில் கல்லை தூக்கிப் போட்டு சங்கர் கொலை செய்தார். அதன்பின் சங்கரை மாரிமுத்துவின் கோஷ்டியில் ஒருவரான அலெக்ஸ் பாபு கொலை செய்தார். தற்போது இதற்கு பழி தீர்ப்பதற்காக நேற்று அலெக்ஸ் பாபு மற்றும் அவரது நண்பர்களான ஆனந்த் கணேஷ் மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும்போது ஷங்கரின் கோஷ்டியைச் சேர்ந்த 10 பேர் மதனபுரம் பகுதியில் பதுங்கி இருந்து அவர்கள் வரும் சமயத்தில் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி அவர்களை சரமாரியாக வெட்டினோம் என தெரிவித்துள்ளனர்.
இதில் மேற்கண்டபடி அலெக்ஸ் பாபு என்பவர் சங்கர் கொலை செய்யப்பட்டது போல் அரிவாளால் வெட்டியும் அவர் தலையில் கல்லை தூக்கிப் போட்டும் அந்த கும்பல் கொலை செய்துள்ளது. அதேபோல் கணேஷ்குமார் குற்றுயிரும் குலையுயிருமாக வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் ஆனந்த் சின்ன காயங்கள் கூட இல்லாமல் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். தற்போது கைது செய்யப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலம் பெற்ற காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருவரை ஒருவர் பலி தீர்ப்பதாக எண்ணி அவர்களது குடும்பத்தை மறந்து ஒரு ஒரு நபராக கொலை செய்து வருகிறார்கள். ஒவ்வொருவரின் இறப்பும் அவரவர் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு. செய்த செயலுக்கு கண்டிப்பாக வினையை பெறத்தான் செய்வார்கள். அதற்கு உதாரணம் பழி தீர்க்க எண்ணி ஒருவரை கொலை செய்த பின் மற்றொருவரும் கொலைதான் செய்யப்பட்டுள்ளார். எனவே பழிக்குப்பழி என்பது சரியான தீர்வல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.