சாலையில் நாற்று நட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில்உள்ள கூழையனூர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக சாலை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் மனு கொடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் பலர் சேறும் சகதியுமாக காணப்பட்ட சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியபோது “இந்த மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் மழைநீரில் நடந்து செல்ல வேண்டியது இருக்கிறது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. ஆகவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு கிராம மக்கள் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் அவர்கள் சிறிது நேரத்திற்கு பின் அங்கிருந்து கலைந்து சென்றனர்.