100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாபிரிக்க அணி. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டி டேவிட் வார்னருக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாகும்..
இந்நிலையில் முதல் இன்னிங்க்சில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகின்றது. இதில் ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களான உஸ்மான் கவாஜா 1 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 14 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இருப்பினும் துவக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் கைகோர்த்து பொறுப்பாக ஆடினர்.
இதில் மிகச் சிறப்பாக ஆடிய வார்னர் சதம் விளாசினார். வார்னர் சதம் அடித்ததன் மூலம் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது 25வது சதத்தை (144 பந்து 100 ரன்) அடித்து அசத்தினார். அதே சமயம் 85 ரன்கள் எடுத்து ஸ்மித் ஆட்டமிழந்தார்.இந்த சதத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு தனது டெஸ்டில் அறிமுகமான வார்னர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8,000 ரன்களை கடந்த 8ஆவது ஆஸ்திரேலியா வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
ஆனால் வார்னர் சதத்தோடு அப்படியே நிறுத்தவில்லை. அதனை தொடர்ந்து அவர் அதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதமும் விளாசினார். சதம் அடித்து விட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த போது வார்னருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் 200 (254) ரன்களில் ஒய்வு பெற்றார்.. இதன் மூலம் 100ஆவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 ஆண்டுகளாக சதம் அடிக்காத வார்னர் தற்போது இரட்டை சதமாக மாற்றி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 3ஆவது இரட்டை சதத்தை வாரார் அடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு பிறகு தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். ஜோ ரூட் சென்னையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 100ஆவது டெஸ்டில் 218 ரன்கள் எடுத்திருந்தார்.
அதேசமயம் ஆஸி.யின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது 100வது டெஸ்டில் இரண்டு சதங்கள் அடித்த ஒரே ஆஸ்திரேலிய வீரர் ஆவார். தற்போது 100வது தோற்றத்தில் சதம் அடித்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆனார்.
100வது டெஸ்டில் 100 ரன்கள் அடித்த பேட்டர்கள் :
⦿ கொலின் கௌட்ரே – 104 – இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 1968
⦿ ஜாவேத் மியாண்டட் – 145 – பாகிஸ்தான் v இந்தியா, 1989
⦿ கோர்டன் கிரீனிட்ஜ் – 149 – வெஸ்ட் இண்டீஸ் v இங்கிலாந்து, 1990
⦿ அலெக்ஸ் ஸ்டீவர்ட் – 105 – இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ், 2000
⦿ இன்சமாம்-உல்-ஹக் – 184 – பாகிஸ்தான் v இந்தியா, 2005
⦿ ரிக்கி பாண்டிங் – 120 மற்றும் 143* – ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, 2006
⦿ கிரேம் ஸ்மித் – 131 – தென்னாப்பிரிக்கா v இங்கிலாந்து, 2012
⦿ ஹசிம் ஆம்லா – 134 – தென்னாப்பிரிக்கா v இலங்கை, 2017
⦿ ஜோ ரூட் – 218 – இங்கிலாந்து v இந்தியா, 2021
⦿ டேவிட் வார்னர் – 200* – ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, 2022
ஆஸ்திரேலிய அணி 386/3 என ஆடி வருகிறது. தற்போது டிராவிஸ் ஹெட் 48, அலெக்ஸ் கேரி 9 ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.