டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை திரைப்படங்களின் வெற்றியை அடுத்து, ஆர்யா நடித்துள்ள படம் “கேப்டன்”. இதில் டெடி படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டுமாக இணைந்து செயல்படுவதால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேப்டன் படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.
இத்திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர்ஆர்யா நெல்லைக்கு வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “கேப்டன் படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வாயிலாக பல காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில திரைப்படத்திற்கு இணையாக இப்படம் உருவாகி உள்ளது. ஆகவே இது தமிழகத்தில் புது முயற்சியாக இருக்கும். மேலும் சிறுவர்களை அதிகளவு கவரக்கூடிய படமாகவும் இது இருக்கும். அதிக பொருட் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைத் துறை பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறது. சென்ற காலங்களில் திரை அரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக இருந்தது. எனினும் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக 100 நாட்களில் கிடைக்கும் வசூல் 2 நாட்களிலேயே கிடைத்து விடுகிறது” என்று அவர் கூறினார்.